S.ரங்கராஜன் பிறந்தது சென்னைத் திருவல்லிக்கேணியில் உள்ள தெப்பக் குளத்தின் தெற்குத் தெரு வீதியில். மே 3, 1935 அன்று. வைஷ்ணவர். அப்பா சீனிவாச ராகவன் மின்சாரவாரியம் வாரியமாவதற்கு முன்னால் இருந்து வேலை செய்து கொண்டிருந்தார். அம்மா கண்ணம்மா, ஒரு பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவர். “சரியாக எழுபது ஆண்டுகளுக்கு முன், வீட்டுக் காரியங்கள் எல்லாம் முடித்துவிட்டு, வலியெடுத்து, எந்தவித உதவியும் இல்லாமல், அப்பா மருத்துவச்சியை அழைத்து வருவதற்க்குள், என்னைப் பெற்றெடுத்த என் அம்மா கண்ணம்மா”.
ரங்கராஜனின் அண்ணன் திரு கிருஷ்ணமாச்சாரி ஒரு டாக்டர், தம்பி ராஜகோபாலன் தொலைபேசி இலாகாவில் இன்ஜினியர். தங்கை விஜி. “ராத்திரி என்னவோ ஆச்சு… ரெண்டு தடவை வாந்தியெடுத்தா. கார்தாலை பிராணன் போய்ட்டது’ என்று பாட்டி அழுதாள். எனக்கு அப்போது பதினொரு வயசு. என் தங்கை விஜிக்கு மூன்று வயது. குழந்தை என்பதால் கையிலேயே தூக்கிப் படித்துறைக்கு கொண்டுசென்று கொள்ளிடக்கரையில் புதைத்தது ஞாபகம் இருக்கிறது. முதன்முறையாக ஆற்றாமை, சோகம் க்ரீப் என் நடைமுறையை பாதித்தது.”
ரங்கராஜன் பிறந்த அந்த வீடு திருவல்லிக்கேணியில் 70 வருடம் கழித்தும் இடிபடாமல் இருக்கிறது.
பிறந்தது சென்னையில் என்றாலும் வளர்ந்தது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். தாத்தா குவளக்குடி சிங்கமையங்கார். அப்பாவின் உத்யோகம் காரணமாக அவர் அடிக்கடி இடம் மாறுவதால், முதல் பதினேழு வருடங்கள் கோதை அம்மாள் என்கிற ருக்குமணி அம்மாள் பாட்டியுடன் வளர்ந்தார். “பாட்டி என்னை எத்தனைத் தூரம் காப்பாற்றி இருக்கிறாள். ஒரு பெரிய சொத்துக்கு சுவிகாரம் கொடுப்பதை கடுமையாக எதிர்த்துத் தடுத்தியிருக்கிறாள். அந்த சுவிகாரம் நடந்திருந்தால் நான் மகேந்திரமங்கலத்திலோ குவளக்குடியிலோ ஒரு பண்ணையாராக வெள்ளிச் சொம்பும், பன்னீர் புகையிலையும் பத்தமடைப் பாயும், இஸ்பெட் ஆட்டமுமாக வளர்ந்திருப்பேன். எழுத்தாளனாகியிருப்பேனா…சந்தேகம்.”
ஸ்ரீரங்கத்தில் The Highschool என்னும் ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் படிப்பு. ரங்கராஜன் படிப்பில் சுட்டியாக இருந்தும் பிரபலமாக எல்லாம் இல்லை. பள்ளிப் படிப்பிற்கு பின் திருச்சிக்கு ஜாகை மாறி, இண்டர்மீடியட் என்று இரண்டு வருடமும், பின் பிஎஸ்சி physics இரண்டு வருடமும் படித்தது புனித சூசையப்பர் காலேஜில். இந்த ஜோசப் காலேஜில் தான் ரங்கராஜனுக்கு ஒரு வாழ்க்கைத் திருப்பம் காத்திருந்தது.
என்ன தான், ஸ்ரீரங்கத்தில் மற்றோரு ரங்கராஜனுடன்(இப்போது கவிஞர் வாலி) சேர்ந்து கையெழுத்துப் பிரதி நடத்திக் கொண்டிருந்தாலும், எழுத்தார்வம் அதிகமானது கல்லூரியில் தான். அப்போது கூட படிக்கத்தான் ஆசை. காரணம் ஜோசப் சின்னப்பா என்ற ஆங்கில விரிவுரையாளரும், ஐயம் பெருமாள் கோனார் என்னும் தமிழாசிரியரும் தான். ஜோசப் சின்னப்பா நடத்திய நான்-டீடெய்ல்டு பாடத்தினால் சிறுகதைகளார்வமும், ஐயம் பெருமாளினால் தமிழார்வமும் ரங்கராஜனுக்கு அதிகமாயின.
1953ல் முதன்முறையாக ஒரு சிறுகதை எழுதி அனுப்பினார். அது ‘சிவாஜி’ என்ற புத்தகத்தில் வெளிவந்தது. “கதை வெளிவந்த போது திருச்சி நகரமே அளம்பி விட்டாற்போல இருந்தது. அந்த வட்டாரத்தில் ‘சிவாஜி’ இதழின் காப்பிகள் கடகடவென்று விற்றுத் தீர்ந்து விட்டன, எல்லாவற்றையும் நானே வாங்கி விட்டதால்”.
அதே ஜோசப் கல்லூரியில் அவருடன் படித்த சக மாணவர், தற்போது இந்தியாவின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். கல்லூரிக்குப் பின்னர், சென்னை குரோம்பேட்டையிலுள்ள MITல்(Madras Institue of Technology), சேர்ந்து எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தார். அப்போதும் அவரின் பாட்ச்சில் படித்தவர் அப்துல் கலாம். கலாம் அப்போது ஏரொனாட்டிக்ஸ் படித்துக் கொண்டிருந்தார். அப்போதே ரங்கராஜன் Infinite Mathematics பற்றியும் கலாம் ஆகாய விமானங்கள் கட்டுவது பற்றியும் தமிழில் விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதி, இருவரும் பரிசு வாங்கினர்.
இன்ஜினியரிங் படிப்பிற்கு பிறகு, ஸ்ரீரங்கத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவரை அவர் தந்தை, வேலைக்கு விண்ணப்பிக்குமாறு அனுப்பினார். இந்திய அளவில் இன்ஜியர்களுக்கான தேர்வு எழுதி ஆல் இந்தியா லெவலில் இரண்டாம் ரேங்க் வாங்கினார். இது நடந்தது 50களில். அப்போது ஐ.ஏ.எஸ் போன்றோரு எக்ஸாம் இது.
இந்திய அரசாங்கம் ரங்கராஜனை அள்ளிக் கொண்டு போய் டெல்லியில் விட்டது. முதலில் ஆல் இந்தியா ரேடியோவில் ட்ரைனியாகச் சேர்ந்தார். பிறகு முதல் வேலையாக சிவில் ஏவியேஷன்ஸ் பிரிவில், Air Traffic Controllerஆக சென்னை மீனம்பாக்கத்தில் சேர்ந்தார். இரண்டொரு வருடங்களுக்குப் பிறகு ‘கிளாஸ் ஒன் – டெக்னிகல் ஆபிசராக’ வேலை மாறி டெல்லி சென்றார்.
பெரிய பெரிய இடங்களில் இருந்து ரங்கராஜனுக்கு வரன்கள் வர, அவரின் அப்பாவோ தன்னுடய ஆபிஸ் நண்பரின் பெண்ணை மணமுடிக்க ஏற்பாடு செய்தார். சுஜாதா எத்திராஜில் பிஎஸ்சி படித்த வேலூர்ப் பெண். ரங்கராஜனுக்கும் – சுஜாதா(!!)விற்கும் கல்யாணம் நடைப்பெற்றது. “அப்போ எனக்கு இருபது வயசு. இவருக்கு இருபத்தேழு. காலேஜ் முடிச்சுட்டு நான் நேரே வந்ததால், எனக்கு உருப்படியா நல்ல ரசம் கூட வைக்கத் தெரியாது. டெல்லியில் குடியிருந்த நம்ம தமிழ் மாமி ஒருத்தர்கிட்டேதான் போய் ஒவ்வொண்ணா சமைக்க கத்துக்கிட்டு வந்தேன். வெடிக்கிற அபாயம் இல்லாத ருக்மணி பிரஷர் குக்கர்லதான் சமையல்!”. பிற்காலத்தில் தன் மனைவியின் பெயரான சுஜாதா என்பது பிரபலமாகப் போகிறது என்பது அப்போது ரங்கராஜனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
இந்த சமயத்தில் தான் வேலை நிமித்தமாக அடிக்கடி டூரில் சென்றார். அப்போது பொழுது போக நிறைய படிக்கவும் எழுதும் ஆர்வம் அதிகமானது. தனது நண்பனான் ஸ்ரீனிவாசனின் சுஷ்மா எங்கே ? என்ற ஒரு க்ரைம் கதையை கொஞ்சம் திருத்திக் கொடுக்க, அது குமுதத்தில் வெளியிடப்பட்டது. அதை தனது எழுத்துக்கான அங்கிகாரமாக வைத்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார்.
குமுதத்தில் ஏற்கெனவே ஒரு (ரா.கி) ரங்கராஜன் இருந்ததால் ”நீங்க வேற ஏதாவது பேர் வச்சுக்கங்களேன்!…” என்று சிலர் சொல்ல, ரங்கராஜன், சுஜாதா என்கிற தன் மனைவி பேரில் எழுத ஆரம்பித்தார். தமிழ் இலக்கிய உலகம் தலையை சிலுப்பி கொண்டு எழுந்தது. ரங்கராஜன் காணாமல் போய் சுஜாதா என்கிற மூன்றெழுத்து பிரபலமாக ஆரம்பித்தது.
ரங்கராஜன் தம்பதிகளுக்கு ஒரு வருடத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்தது. அதற்குப் பிறகு ரங்க பிரசாத், கேஷவ பிரசாத் என்று இரண்டு மகன்கள். கேஷவ் பிரசாத்திற்கு திருமணமாது ‘கே’ என்கிற ஜப்பானிய பெண்ணுடன். அவர்களுக்கு சித்தார்த் என்று ஒரு மகன், இவருடைய பேரன்.
டெல்லியில் பதினான்கு வருடங்கள் கழித்து, 1970ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ்[BEL] நிறுவனத்தில் டெபுடி மானேஜராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின் முப்பது வருடங்கள் பெங்களூர் வாசம் தான். பிறகு சிறிது வருடங்களில் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டு பிரிவில் ஜிஎம் பதவிக்கு உயர்ந்த போது, கடுமையான வேலைகள் காத்துக் கொண்டிருந்தன. Electronic Voting Machine(EVM) என்று இன்றுள்ள வாக்கெடுப்பு இயந்திரத்தை தயாரித்த BELலின் R &D பிரிவின் சீப் ஆக பணியாற்றினார். இந்த வாக்கெடுப்பு மிஷின் தான் இந்தியாவெங்கும் பயன்படுத்தப் படுகிறது.
இங்குதான் மீண்டும் தன் நண்பர் கலாமுடன் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. இருவரும் ஏவுகணை ப்ரோக்கிராமிங் செய்தார்கள். கலாமைப் பற்றி தனது நினைவுகளை பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் சுஜாதா. அவர்களிருவரும் சேர்ந்து ராக்கெட் இயலை பற்றி திப்பு சுல்தான்லிருந்து தொடங்கி எழுத நினைத்திருந்தனர். இன்னும் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இதே நேரத்தில், எழுத்துலகில் ராக் ஸ்டார் அளவிற்கு புகழ் பெற்றார். ஒரே நேரத்தில் ஐந்து புத்தகங்களில் ஆறு தொடர்கதைகளெல்லாம் எழுதினார். “இவர் எழுதினா இவரோட லாண்டிரி பில்லைக் கூட பப்ளிஷ் செய்வாங்க” என்றெல்லாம் பேசினார்கள். கதை, கட்டுரை, நாடகம், ஊடகம் என்று தனது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டு எழுதினார். இவரின் கதைகள் நன்றாக இருந்தாலும் அவைகளை சினிமா படமெடுத்தவர்கள் மாற்றியதால் தோல்வியைத் தழுவின. பாலசந்தருக்கு நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு முதன் முதலில் வசனமெழுதினார்.
1993ல் பிஇஎல்லிலிருந்து ரிடையரான போது முடிவெடுக்கப் பட வேண்டிய விஷயம் ஒன்றிருந்தது. ரிடையர்மெண்டுக்கு பிறகு எங்கு செல்வது? சென்னை செல்ல வேண்டாம், குடிநீர்ப் பிரச்சனை என்று சொன்ன நண்பர்களை தட்டிக் கொடுத்து சென்னையில் ஆழ்வார்ப்பேட்டையில் குடியேறினார்.
இதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தான் மணிரத்னத்தின் ரோஜா படத்திற்கு வசனமெழுதினார். அந்தப் படம் தமிழ் சினிமாவை நிறையவே மாற்றிப் போட்டது. சென்னைக்கு வந்த பின், கமல் சொல்லி ஷங்கரின் படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்தார். சிவாஜி புத்தகத்தில் வந்த சிறுகதை தொடங்கி இன்று ரஜினியின் சிவாஜிப் படத்திற்கு வசனம் வரை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலம் எழுத்துலகில் இருந்து வந்திருக்கிறார். இன்று வரை 100 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 15 நாடகங்களும், ஏராளமான விஞ்ஞான மற்றும் இதர கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். நண்பர்களுக்காக அவ்வப்போது சினிமாப் பட வசனம் எழுதுகிறார்.
“Writing was never my career, it was my hobby” என்பார். தொடக்கத்திலிருந்து அந்த creative impulseஐ வெளிப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்திருக்கிறார். படம் வரைந்திருக்கிறார்.”நான் எழுத வரலைனா படம் வரைஞ்சுண்டு இருப்பேன்”. ஹார்மோனிகா முதற்கொண்டு புல்லாங்குழல், புல்புல்தாரா வரை எல்லாம் வாசித்துப் பழகியிருக்கிறார்.
“ஒரே ஒரு முறை, “மாடில பூனை குட்டி போட்டிருக்கா பாரு” என்று கேட்டாள் பாட்டி.
“பூனை இல்லை பாட்டி…புல்புல்தாரா, நான் வாசிக்கறது”.
“நீ மாடிக்கு படிக்கப்போறேன்னு நினைச்சேன்”.
“அது வந்து..படிப்பேன்..அப்பப்ப வாசிப்பேன்”.
“ஒண்ணு படி…இல்லை மோர்சிங் வாசி”.
“மோர்சிங் இல்லை…புல்புல்தாரா”
“பேரைப் பாரு!! உங்கப்பாவுக்கு லெட்டர் போட்டுர்றேன்…எனக்கு கவலையா இருக்கு. இன்னிக்கு புல்புல் வாசிப்ப…நாளைக்கு புகையில போடுவ.. கூத்தாடியாத்தான் வரப்போறேன்னா ஒரு காரியத்தை உருப்படியாப் பண்ணு…உங்கப்பன் காசைக் கரியாக்காதே”
டெல்லிக்குப் போய் ஒரு கிட்டார் வாங்கி தானகவே பழகிக்கொண்டார். மனைவி – “அப்போ மேற்கத்திய இசை உலகில் ‘பீட்டில்ஸ்’ வந்த பீரியட். இளைஞர்கள், கிதார் கிதார்னு பைத்தியமா இருந்த நேரம்! இவர் ரொம்ப அருமையா கிதார் வாசிப்பார்!… கிதார் மட்டுமல்ல… எல்லா இசைக்கருவிகளையுமே நல்லா வாசிப்பார். இவர் யார்கிட்டேயும் இதுக்காக கத்துகிட்ட மாதிரி தெரியலே… அவரேதான் முயற்சி பண்ணி வாசிச்சார் போல!…”
இதைப் போல் எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பலவகையான false startsக்குப் பின் தன் ஆரம்பக் காதலான எழுத்துக்கு திரும்பி வந்துவிட்டார்.
சுஜாதாவிற்கு என்பதுகளின் நடுவிலும் பிறகு 2002லும் உடல் நிலை பாதித்தது. இரண்டு முறை ஆன்ஜியோவும் ஒரு பைபாஸும் செய்திருக்கிறார்கள். தன் உடல் நிலை காரணமாக அதிகமாக நடமாட முடியாமல் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் எழுத்தார்வமோ குறைவதாகக் காணோம்.
தற்போது மயிலாப்பூரில் ஒரு ப்ளாட்டில் தனது மனைவி சுஜாதா மற்றும் கிவி என்றொரு செல்ல நாயுடன் வசித்து வருகிறார். இரு மகன்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.
அம்பலம்.காம் என்னும் ஒரு வலைதளத்தின் நிர்வாகப் பொறுப்பில் தற்போது பணியாற்றுகிறார். பெண்டாபோர் சந்திரசேகரனுடன் மீடியா ட்ரீம்ஸ் என்னும் ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மனைவி – “தினமும் ‘அம்பலம் டாட் காம்’ ஆபீஸக்கும், பென்டாஃபோரோட ‘மீடியா ட்ரீம்ஸ்’ ஆபீஸக்கும் காலையில் போய்ட்டு வருவார். மதியம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அஞ்சரைக்கு மேல மெரினாவில் வாக் போயிட்டு வருவார். வந்தப்புறம் எழுதறது, படிக்கிறதுன்னு சமயத்தில் நைட் ஒரு மணி வரைகூட வேலை பார்ப்பார். ”
வாராவாரம் சனிக்கிழமையன்று அம்பலம்.காமில் வணக்கம் நண்பர்களே என்று சாட்டுக்கு வந்து விடுவார். தனது வாசகர்களுடன் வாராவாரம் சாட் செய்யும் தமிழ் எழுத்தாளர் இவர் ஒருவர் தான். நீங்கள் கூட writersujatha@hotmail.com என்று மெயிலனுப்பலாம். ரத்தின சுருக்கமாய் எழுதினால் பதில் கண்டிப்பாய் வரும்.
என் பழைய நண்பி ஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில்,” Nobody dies; they live in memories and in the genes of their children”. How True ?
Source: https://kirukkal.com/2007/04/28/writer-sujatha-short-biography/