அப்பொழுது தமிழில் கவிதையில் இருக்கும் அளவுக்கு கதையில் எனக்கு ஆளுமை இல்லை. இப்பொழுது சோழா ஷெரட்டன் ஹோட்டல் இருக்குமிடத்தில் முன்பு ஒரு திருமண மண்டபம் இருந்தது. அந்த திருமண மண்டபத்தில் தினமணி கதிர் பத்திரிகையின் சார்பாக, அதன் ஆசிரியராக இருந்த திரு. சாவி அவர்கள் எழுத்தாளர் சுஜாதாவை சென்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

மண்டபம் முழுக்க அடர்த்தியான கூட்டம். புதிய உரைநடை எழுதுபவர்கள், புதுக் கவிஞர்கள், சிவப்பிலக்கிய எழுத்தாளர்கள், காதல் கதை எழுதுபவர்கள், துப்பறியும் கதை செய்பவர்கள் என்று பல தரப்பட்ட எழுத்தாளர்கள் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். எழுத்தாளர் திரு. மெளனி அவர்கள் வந்திருந்தார்கள். கூட்டம் ஆரம்பிக்கும் முன்பு எழுத்தாளர் திரு. மெளனியிடம் திரு.சுஜாதா போய் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். திரு. மெளனி அவர்கள் நாங்கள் உங்கள் எழுத்தை படித்ததில்லை, உங்களை பற்றி இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் வந்தேன் என்று சொல்ல, சற்றும் தயங்காமல் நான் உங்கள் எழுத்தை படித்திருக்கிறேன். எனக்கு அது பேருதவி செய்திருக்கிறது என்று சிறிது கூட சலனமில்லாமல் உண்மையான பணிவோடு பதில் சொன்னார். தொட்டதெற்கெல்லாம் சீறி விழும் எங்களை போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு அந்த பணிவு ஆச்சரியமாக இருந்தது. அந்தக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டம் முடிந்த பின் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். கவிதையில் உள்ள ஆளுமை போல சிறுகதையில் வரவில்லை. சிறுகதை சிந்திப்பது எப்படி என்று தெரியவில்லை என்று நான் கேட்க, இது ஒன்றும் கடினம் இல்லை. நான் சொல்லித் தருகிறேன் என்று சொல்லி ஒரு நேரம் குறிப்பிட்டார்.நானும், அமரர் சுப்ரமணியராஜூவும் அவருடைய தமையனார் வீட்டிற்கு அருகே உள்ள இடத்தில் காத்திருந்தோம்। எழும்பூரில் டாக்டர் நாயர் பாலத்திற்கு போகும் முன்பு ஒரு சிறிய புல் திடல் இருந்தது। அந்த புல் திடலில் நின்றபடி வெகு நேரம் இலக்கியம் பேசினோம். மறுபடியும் சிறுகதை எழுதுவது எப்படி என்று கேள்வி கேட்க, முதல் வாக்கியத்திலேயே கதையை ஆரம்பித்து விட வேண்டும்.
“நான் ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டு தலை வாரிக் கொண்டிருந்தேன்। தெருவில் ஒருவன் நடந்து போய் கொண்டிருந்தான். அவனுக்கு தலையே இல்லை” .இது முதல் பேரா.
அடுத்த பேராவில் “அவன் தலையில் ஒரு பானையை கவிழத்து கொண்டு போய் கொண்டிருந்தான்।” என்று எழுது அல்லது “அவன் தலை வெட்டப்பட்டு விட்டது. முண்டம் மட்டும் நடந்து போய் சுருண்டு விழுந்தது” என்று எழுது. முதல் வகை நகைச்சுவை கதை. இரண்டாவது துப்பறியும் கதை. வேறு ஏதாவது விதமாகவும் கூட இதை எழுதலாம். ஆனால் முதல் பேராவில், முதல் வாக்கியத்தில் கதை ஆரம்பித்து விட வேண்டும். பொல பொலவென்று பொழுது விடிந்தது. “சார் போஸ்ட்” என்ற சத்தம் கேட்டது. நாளை விடிந்தால் தீபாவளி என்றெல்லாம் எழுதாதே என்று சொல்லிக் கொடுத்தார். என்ன சொல்லப் போகிறோம், எப்படி சொல்லப் போகிறோம் என்று யோசி என்று விவரித்துக் கொடுத்தார். எனக்கு அந்த சந்திப்பு மிக உபயோகமாக இருந்தது.பிற்பாடு ஒரு கூட்டத்தில் அவர் இருந்த போது அவர் முன்னிலையில் “எனக்கு எழுத சொல்லிக் கொடுத்தது திரு. சுஜாதா அவர்களே” என்று நான் நன்றியோடு இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த போது, அவர் மெல்ல எழுந்து வந்து என்னிடமிருந்து மைக் வாங்கி, “நான் ஒரு நூறு, நூற்றைம்பது பேருக்கு எழுத சொல்லிக் கொடுத்தேன். ஒரே ஒரு பாலகுமாரன் தான் புரிஞ்சிண்டான். கத்துக் கொடுக்கிறது ஒன்றும் பெரிய விஷயம் இல்ல. கத்துக்கறது தான் பெரிய விஷயம்” என்று சொன்னார். கூட்டம் கை தட்டி பெரிதாக ஆரவாரித்தது. கூட்டம் முடிந்த பிறகு எனக்கு சொல்லிக் கொடுங்கள். எனக்கு சொல்லிக் கொடுங்கள் என்று பல இளைஞர்கள் திரு. சுஜாதாவை சூழ்ந்து கொண்டார்கள். திரு. சுஜாதா பல பேருக்கு பலதும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
ஒரு கால கட்டத்து இளைஞர்களை வெகு அழகாக தமிழ் இலக்கியத்திற்கு இழுத்து வந்தார். கட்டுரையாயினும் சரி. கதையாயினும் சரி. படிக்க சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதை முக்கியமான கட்டளையாக ஏற்று எல்லா படைப்புகளையும் மிக நேர்த்தியாக நெய்து வந்தார்.
எழுத்தாளர் திரு। சாவி அவர்களுடன் பெங்களூருக்கு ஒரு சுற்றுப்பயணம் போனோம்। அதில் எழுத்தாளர் ராணி மைந்தன், சுப்ரமணியராஜூ, விசிட்டர் அனந்த், நான் என்று பலர் இருந்ததாக நினைவு। நாங்கள் எல்லோரும் திரு. சுஜாதா வீட்டிற்கு ஒரு காபி குடிக்க போய் அவரோடு பேசி விட்டு வந்தோம். பல எழுத்தாளர்கள் ஒன்று கூடி ஒரு எழுத்தாளர் வீட்டிற்கு பத்திரிக்கையில் எழுதுவதற்காகப் போனதாய் சம்பவம் உண்டா. இது போல் முன் எப்போதும் நடந்ததில்லை. இனி நடக்குமா என்றும் தெரியவில்லை.

அவரிடம் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஒரு கனிவு இருந்தது. அந்தக் கனிவும், கவர்ச்சியும் அவர் எழுத்திலும் இருந்தது. சுஜாதாவின் மறைவு தமிழ் உரைநடைக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு. சுஜாதா ஸ்தூலமாக இல்லாது போனாலும் எவரெல்லாம் நல்ல தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அவர்களுடைய நெஞ்சில், அவர்கள் ஆசையில் வழிகாட்டியாய் வாழ்ந்து கொண்டிருப்பார்