sujatha novels free download pdf, sujatha rangarajan novels free download, sujatha short stories free download.

பணம்

 பணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது.

பள்ளியில் படிக்கும்போது மத்தியானம் சாப்பிட வீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில் காசைக் காட்டமாட்டாள்.

எப்போதாவது இரண்டணா கொடுத்து ‘பப்பரமுட்டு’ வாங்கிச் சாப்பிடு என்று தருவாள்.

இரண்டணா ஒரு இரண்டுங்கெட்டான் நாணயம்.

ரங்கராஜா கொட்டகையில் சினிமா தரை டிக்கெட் வாங்கலாம். பிரச்சனை, வெளியே வரும்போது சட்டையெல்லாம் பீடி நாற்றம் அடிக்கும். பாட்டி கண்டு பிடித்துவிடுவாள்.

பாட்டிக்கு ஜனோபகார நிதி என்று ஒரு வங்கியில் கொஞ்சம் குத்தகைப் பணம் இருந்தது. அதிலிருந்து எப்போதாவது எடுத்து வரச்சொல்வாள். 25 ரூபாய்.

நடுங்கும் விரல்களில் இருபத்தைந்து தடவையாவது எண்ணித்தான் தருவார்கள்.

பாங்கையே கொள்ளையடிக்க வந்தவனைப்போல என்னைப் பார்ப்பார்கள்.

திருச்சி செயிண்ட் ஜோசப் காலேஜில் படித்தபோது, ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி டவுனுக்கு மூணு மாசத்துக்கு மஞ்சள் பாஸ் ஒன்று வாங்கித் தந்துவிடுவாள்.

லால்குடி பாசஞ்சரில் பயணம் செய்து கல்லூரிக்குப் போவேன்.

மத்யானம் ஓட்டலில் சாப்பிட இரண்டணா கொடுப்பாள்.

பெனின்சுலர் ஓட்டலில் ஒரு தோசை இரண்டணா. சில நாள் தோசையத் துறந்து விட்டு இந்தியா காப்பி ஹவுசில் ஒரு காப்பி சாப்பிடுவேன்.

ஐஸ்க்ரீம் எல்லாம் கனவில்தான்.

எம்.ஐ.டி படிக்கும் போது அப்பா ஆஸ்டல் மெஸ் பில் கட்டிவிட்டு என் சோப்பு சீப்பு செலவுக்கு 25 ரூபாய் அனுப்புவார்.

பங்க் ஐயர் கடையிலும் க்ரோம்பேட்டை ஸ்டேஷன் கடையிலும் எப்போதும் கடன்தான். எப்போது அதைத் தீர்த்தேன் என்று ஞாபகமில்ல.

இன்ஜினீயரிங் படிப்பு முடிந்து ஆல் இண்டியா ரேடியோவில் ட்ரெய்னிங்கின்போது ஸ்டைப்பெண்டாக ரூ.150 கிடைத்தது.

ஆகா கனவு போல உணர்ந்தேன். அத்தனை பணத்தை அதுவரை பார்த்ததே இல்லை.

சவுத் இண்டியா போர்டிங் அவுசில் சாப்பாட்டுச் செலவு ரூ.75. பாக்கி 75_ஐ என்ன செய்வது என்று திணறினேன்.

உல்லன் ஸ்வெட்டர், ஏகப்பட்ட புத்தகங்கள் என்று வாங்கித் தள்ளினோம்.

மாசக் கடைசியில் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் மிச்சமிருந்தது.

அதன்பின் வேலை கிடைத்தது.

1959_ல் சென்ட்ரல் கவர்மெண்டில் ரூ.275 சம்பளம்.

அப்பாவுக்கு ஒரு டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்தேன். அம்மா எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.

ஒரு மாண்டலின் வாங்கி ராப்பகலாக சாதகம் பண்ணினேன்.

வீட்டுக்குள் ஆம்பிளிஃபயர், ரிகார்ட் ப்ளேயர் எல்லாம் வைத்து அலற வைத்தேன். எல்லாவற்றையும் அம்மா சகித்துக் கொண்டிருந்தாள்.

பி.எஸ்சி., பரீட்சை எழுதி டில்லிக்கு டெக்னிக்கல் ஆபீசராக வந்துவிட்டேன்.

சம்பளம்? மயங்கிவிடாதீர்கள் ரூ.400!

முதன்முதலாக ஐ.ஓ.பி.யில் என் பெயரில் ஒரு அக்கவுண்ட், சகட்டு மேனிக்கு புத்தகங்கள், வெஸ்பா ஸ்கூட்டர் அலாட்மெண்ட் ஆன போது உலகத்தின் உச்சியைத் தொட்டமாதிரி இருந்தது.

அடுத்தபடி பாரத் எலக்ட்ரானிக்ஸில் டெபுட்டி மேனேஜராகச் சேர்ந்தபோது சம்பளம் முதல் முதலாக நான்கு இலக்கத்தைத் தொட்டது.

பங்களூருக்கு இடமாற்றம். செகண்ட் ஹாண்டில் கருப்பு அம்பாஸடர் கார்; திருமணம்.

என்னிடம் ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க மாட்டேன்,

சேராது.

எப்போதும், தேவைக்குச் சற்றே சற்று குறைவாகவே பணம் இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது.

 யாராவது வந்து பெரிசாக எதிர்பார்த்து கடன் கேட்டால் வேஷ்டியை அவிழ்த்து ஸாரி, பாங்க் புத்தகத்தைத் திறந்து காட்டிவிடலாம்.

ஒரு சிறிய அறிவுரை, அதிகப் பணம் சேர்க்காதீர்கள். இம்சை, தொந்தரவு...

இன்று பலபேருக்கு என்னிடம் சந்தேகம். சினிமாவுக்கு எல்லாம் கதை எழுதி வருகிறாய், அவர்கள் இரண்டு கைகளிலும் தாராளமாய் பணம் கொடுப்பார்கள். புத்தகங்களிலிருந்தும் பத்திரிகை களிலிருந்தும் ராயல்டி வரும். இத்தனை பணத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்கிறாய்?

என் அனுபவத்தில் ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்து விட்டால், ஒரு பெரிய செலவு வந்தே தீரும்.

இது இயற்கை நியதி.

அந்தச் செலவு வைத்தியச் செலவாக இருக்கும் அல்லது வீடு, கார் ஏதாவது வாங்கினதுக்கு வங்கிக்கடனாக இருக்கும்.

இதிலிருந்து முக்கியமாக நான் கண்டுகொண்டது,

செலவு செய்தால்தான் மேற்கொண்டு பணம் வருகிறது என்பதே.

இன்று பலருக்கு என் பண மதிப்பைப் பற்றிய மிகையான எண்ணங்கள் இருக்கலாம்.  உண்மை நிலை இதுதான்.

இன்றைய தேதிக்கு கடன் எதுவும் இல்லை. என்னிடம் இருக்கும் பணத்தில் குற்றநிழல் எதுவும் கிடையாது.

ராத்திரி படுத்தால் பத்து நிமிஷத்தில் தூக்கம் வந்து விடுகிறது.

எகனாமிஸ்ட்டுகள் என்ன என்னவோ கணக்குகள் போட்டு ஜிஎன்பி, ஜிடிபி என்றெல்லாம் புள்ளிவிவரம் தரலாம்.

நான் தரும் எளிய புள்ளி விவரம் இது.

ஒரு ரூபாய், அதன் வாங்கும் மதிப்பு கவனித்தால் உங்களுக்கு இந்தியப் பொருளாதாரம் சட்டென்று புரிந்துவிடும்.

இந்த வாங்கும் மதிப்பு காலப்போக்கில் குறைந்து கொண்டே வந்திருக்கிறது.

முன்பெல்லாம் ஒரு ரூபாய் ஒரு வாரம் வரை தங்கியது.

இன்று ஒரு மணிநேரம்கூட, சிலசமயம் ஒரு நிமிஷம் கூட தங்குவதில்லை.

யோசித்துப் பாருங்கள்.

Share:
Copyright © Sujatha Novels Free Download Pdf | Sujatha Rangarajan Short Stories Pdf Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com