"என்ன பாலாஜி எப்படி இருந்தது பேப்பர்?"
அவர் எதிரே உட்கார்ந்தான்.
"அப்பா ரொம்ப பெரிய சர்ப்ரைஸ். அந்த பேப்பர் மாடல் பேப்பர் இல்லை. அதே பேப்பர்; அன்னிக்கு அந்த ஆளு கொண்டு கொடுத்த அதே பேப்பர். ஒரு கேள்விகூட தவறாம நூறு கேள்வியும் அதே வந்தது".
"அப்படியா தட்ஸ் லக்கி! எழுதிட்டயோல்றீயோ? அதான் சீக்கிரமே எழுதிட்டு வந்துட்டியா?"
"இல்லை எழுதாம வந்துட்டேன்"
அதிர்ந்து போய் "என்னது" என்றார்.
"ஆமாம் வெறும் தாளைக் கொடுத்துட்டு எழுந்து வந்துட்டேன்"
"என்னடா சொல்றே பைத்தியக்காரா! ஏண்டா"
"எனக்கென்னவோ இது நியாயமில்லைன்னு பட்டுது; பத்தாயிரம் பேர் எழுதறாங்க. ஒழுங்கா நேர்வழியில் மாஞ்சு மாஞ்சு எழுதறாங்க. நான் மட்டும் திருடப்பட்ட, லீக் ஆன பேப்பரை வெச்சு எழுதறது. இட்ஸ் நாட் பேர். அப்பா நீங்க அன்னிக்குப் பேசிண்டிருந்ததை கவனிச்சப்ப அந்தாளுக்கு ஏதோ காரியம் செய்ததுக்கு லஞ்சம் மாதிரித்தான் இந்த பேப்பரோன்னு தோணித்து, எனக்குப் பிடிக்கலைப்பா!".
ராம துரை கிட்டே போய் அவனை அணைத்துக் கொண்டார்.
"என்னடா பிடிக்கலை"
"அப்பா நீங்க எவ்வளவு சுத்தமானவர்னு தெரியும். எனக்காக நீங்க உங்களைக் கறைப்படுத்திக்கறதை நான் விரும்பலை. அப்புறம் இந்த மாதிரி பரீட்சையெல்லாம் சொந்த முயற்சியில்தான் பாஸ் பண்ண விரும்பறேன். உங்களைச் சார்ந்து இருந்தது போதும் எனக்கு!"